Perambalur: Deworming Tablet; The Collector started the work to provide about 2.17 lakh people!
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்.
முன்னதாக குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்கள் இரு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக 30.08.2024 அன்றும் நடைபெற உள்ளது.
சாப்பிடும் முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், திறந்தவெளியில் மலம் கழித்தலை தவிர்க்க வேண்டும். மாணவ மாணவிகளாகிய நீங்கள் உங்கள் உறவினர்களிடம் இதுகுறித்து எடுத்துக்கூற வேண்டும். நீங்களும் முறையாக பின்பற்ற வேண்டும். முறையாக கை கழுவாமல் உணவு உட்கொண்டால் குடற்புழு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இவற்றை தவிர்க்கவே, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றது.
இச்சிறப்புமுகாமில் 1 முதல் 19 வயதிலானஅனைத்துகுழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும்,20 முதல் 30 வயதிலானஅனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்கமாத்திரை (அல்பென்டசோல்) ஒரே நாளில் வழங்கப்படுகிறது.
1 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்கமாத்திரை வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குடல் புழுக்கள் வராமல் தடுக்கப்பட்டு குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும். அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் மூலமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் 45,034 பெண்கள் என மொத்தம் 2,16,624 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் தன் சுத்தம் பற்றியும், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல் பற்றியும், கை கழுவும் முறைகள் பற்றியும் நலக்கல்வி வழங்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி ஜெயஸ்ரீ, சுகாதார திட்டப்பணிகளுக்கான உதவி திட்ட மேலாளர் கலைமணி, வட்டார மருத்துவ அலுவலர் சூரியகுமார், மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.