Perambalur: District Farmers’ Grievance Redressal Day meeting; It was led by the Collector!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், விவசாய சங்கத் தலைவர்கள் பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பாக இடுபொருட்கள் வழங்கியமைக்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். ராமராஜன் : கொட்டரை நீர்தேக்க கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கியமைக்கு நன்றி தெரிவித்தும் வெங்காயத்திற்கு காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டுமெனவும்,
ராஜீ: கை.களத்தூர் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தரவும், மழைக்காலத்தில் மாவட்டத்தில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், விசுவநாதன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரயில் சேவை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வாலிகண்டாபுரம் கோனேரி ஆற்றில் முட்புதர்களை அகற்றி தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,
ஏகே.ராஜேந்திரன்: எறையூர் சர்க்கரை ஆலை பகுதியில் விபத்துகள் ஏற்படா வண்ணம் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அனைத்து வட்டாரங்களிலும் காவல் நிலையங்கள் அதிகப்படுத்த வேண்டுமெனவும்,
விநாயகம்: தெரணி பகுதியில் உள்ள ஏரி சுத்தம் செய்து ஆழப்படுத்த வேண்டுமெனவும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ராஜா: விவசாயிகளுக்கு மானியத்தில் அதிக விசைத்தெளிப்பான் வழங்க வேண்டுமெனவும், வரதராஜன்: மாவட்டத்தில் கரும்பு உற்பத்தியாளர்களின் நலன் கருதி கரும்பிற்கான வெட்டுக்கூலியை ஆலை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும், மணி: வெங்காயத்தில் திருகல் நோய் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,
நீலகண்டன்: கரும்பிற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டுமெனவும், மரவள்ளி கிழங்கில் ஏற்படும் மாவுப்பூச்சி நோயால் பயிர் பாதிப்படைந்ததற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்து தர வேண்டுமெனவும், விவேகானந்தன்: அரும்பாவூர் பகுதியில் உள்ள மின் விளக்குகளை சீர்செய்திட வேண்டுமெனவும், பால் குளிரூட்டும் நிலையம் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,
ராஜாசிதம்பரம்: மாவட்டத்தில் வெங்காய விற்பனை மையம் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும்,
அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த கலெக்டர் கிரேஸ் பச்சாவ், கோரிக்கைகளுக்கு தொடர்புடைய அலுவலர்களை உடனுக்குடன் விளக்கமளிக்க செய்து, கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். விவசாயிகள் கோரிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கரும்புக்கான நிலுவைத்தொகை விவசாயிகளுக்கு கிடைத்திடவும், வெங்காயத்தில் ஏற்படும் திருகல் நோய் பாதிப்பை தடுக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். கரும்புக்கான நிலுவைத்தொகை விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
வேளாண்மைத்துறை மூலம் 4 விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மின்கலதெளிப்பான்களும், தோட்டக்கலைத்துறை மூலம் 2 விவசாயிகளுக்கு மாடித்தோட்ட தொகுப்பு மற்றும் ஊட்டச்சத்து பயிர்ச்செடி தொகுப்பினையும் வழங்கினார். மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொது தகவல்கள்:
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2024 நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 223 மி.மீ., பெய்த மழையளவு 80.64 மி.மீ, ஆகும். 2024 நவம்பர் மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 791 மி.மீ., பெய்த மழையளவு 624.45 மி.மீ, ஆகும்.
விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 40.154 மெ.டன்கள், சிறுதானியங்களில் 6.800 மெ.டன்கள், பயறு வகைகளில் 7.534 மெ.டன்கள், எண்ணெய்வித்து பயிர்களில் 14.581 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. மாவட்டத்தில் தற்சமயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது.
தோட்டக்கலை துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக் கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது என அறிவிக்கப்பட்டது.