Perambalur: Door-to-door verification of voter list; Get involved! district DMK in-charge V. Jagadeesan report!
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல், முகவரி மாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி 01.01.2025 என்ற நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக சிறப்பு திருத்தப்பணிகள் 20.08.2024 முதல் துவங்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
இச்சிறப்பு சுருக்க முறை திருத்த நடவடிக்கையினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 06.01.2025 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 01.01.2025-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தி எதிர்வரும் 06.01.2025-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
வாக்காளர் பட்டியல் தொடர்திருத்த பணியின் முதல் நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குசாவடி மைய பகுதியில் வசித்துவரும் அனைத்து வாக்காளர்களின் விபரங்களை ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18 வரை வீடு, வீடாக சென்று சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளார்கள்.
கள ஆய்வின் போது ஒவ்வோரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் அவர்களில் எவ்வளவு பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளார்கள் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் விடுபட்டுள்ள வாக்காளர்களை கண்டறிந்து சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த சரிபார்ப்பு பணியானது வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள செயலி வழியாக (BLO APP) மேற்கொள்ள உள்ளனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லம் தேடி வரும்போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கவும், இறந்துபோன அல்லது நிரந்தரமாக புலம் பெயர்ந்த நபர்களை இனம் கண்டு நீக்கம் செய்திடலாம்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள்,கழக முன்னோடிகள், கழக உடன் பிறப்புகள் என அனைலரும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் இணைந்து உடனடியாக வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.