Perambalur: Ensuring the safety of children living in villages is the duty of the VAO; Collector speaks!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான 2 நாள் திறன் வளர்ப்பு பயிற்சியை கலெக்டர் ப.அப்துல் ராசிக் தொடங்கி வைத்தார். இதில், பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாலியல் வன்கொடுமை, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம், குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கலெக்டர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கினார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது: ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கின்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்வது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும். அவர்களுக்கான கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விவரங்களை தெரிவிக்கலாம். நமது மாவட்டத்தில் குழந்தை திருமணம் மற்றும் இளம் பருவ கர்ப்பிணிகள் பெரும்பாலான பகுதியில் இருந்து வருகின்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பாலியல் குற்றங்களை நிகழ்த்துவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சீ.ப.பிரியா, குழந்தைகள் நலக் குழுமம் அலுவலர்கள் மற்றும் இளைஞர் நீதிக் குழுமம் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குன்னம், ஆலத்தூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சிகள் நாளை நடக்கிறது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!