Perambalur: Exam for Technical Jobs ; Collector visited in person.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தினை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 2 மையங்கள் என மொத்தம் 05 மையங்களில் தேர்வு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 1,346 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 644 நபர்கள் தேர்வெழுதினர். 702 பேர் தேர்வெழுத வரவில்லை.
தேர்வு நடைமுறையினை கண்காணிக்க சார் ஆட்சியர் கோகுல் தலைமையிலான குழுவினரும், வட்டாட்சியர்கள் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர், உதவியாளர் ஆகியோர் அடங்கிய இரண்டு நகரும் குழுக்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.