Perambalur: Export Promotion Committee meeting held under the chairmanship of Collector Grace Pachau!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்தியாவில் சிறந்த ஏற்றுமதி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும் ஏற்றுமதியில் முதல் இடத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்புக் குழுக்கூட்டம் தொடர்புடைய துறை அலுவலர்கள் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் தென்மண்டல இணை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்தினர், ஏற்றுமதியாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்றுமதிக்குரிய விவசாயம் தொடர்பான பொருட்களான வெங்காயம், பருத்தி மக்காச்சோளம் மற்றும் மக்காச் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மொத்தம் 15,945 உள்ளது. இந்நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் ஏற்றுமதியாளர்களுக்கான சிறப்பு நிதி மற்றும் மானியம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், செட்டிகுளத்தில் கிராமத்தில் உள்ள வெங்காய குளிர்பதன சேமிப்பு கிடங்கின் தற்போதைய நிலை, பயன்பாடுகள் அதன் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்தும், வெங்காயம் சேமிப்பு குறைந்தபட்சம் ஆறு மாதம் கெடாமல் பாதுகாப்பு செய்வது தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேளாண்மைத்துறை வர்த்தக துணை இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் தொழில் வளங்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத்தலைவர் தெரிவித்துள்ளபடி பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் சார்பில் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியா முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு அவர்களின் ஏற்றுமதி திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை மேம்படுத்துவதில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த அமைப்பானது இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வணிகங்களுக்கு உதவிடவும் பயிற்சி மற்றும் தளங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதனை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பயன்படுத்தி ஏற்றுமதி செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் உட்பட நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதில் இந்திய ஏற்றமதி நிறுவனங்களின் பங்களிப்பும், ஏற்றுமதி பொது மேனிஃபெஸ்ட் குறைபாடு மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருடகளின் மீதான வரிகள் மற்றும் வரிகளை குறைத்தல் போன்ற அடிப்படை சுங்க விதிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், ஏற்றுமதி தரவு செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (EDPMS) மற்றும் இறக்குமதி தரவு செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (IDPMS) ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜெ.பிரபு ஜெயக்குமார் மோசஸ், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் சி.விஜய் ஆனந்த், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்சத்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், சங்க தலைவர், உறுப்பினர்கள், பெரம்பலூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.