Perambalur: Farmers are worried as water escaping from the Arumbavur Lake sluice breach is engulfing their paddy crops!
பெரம்பலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரும்பாவூர் பெரிய ஏரியில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டு ஏரியில் இருந்த நீர் வெளியேறி அருகில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்களை சூழ்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா அரும்பாவூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியானது சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியின் மூலம் சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதே பச்சைமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏரி முழுவதுமாக நிரம்பி இருந்தது. அப்போது ஏரியின் தெற்கு புறம் உள்ள மதகு பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டு வருவதாகவும் இதனை சரி செய்ய வேண்டும் எனவும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ அப்போதைக்கு தற்காலிகமாக கசிவு ஏற்பட்ட பகுதியில் மண்ணை மட்டும் கொட்டி சரி செய்திருந்தனர். நிரந்தரமாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் தெற்கு பகுதியில் உள்ள மதகு அருகே மீண்டும் கரையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு இது மெல்ல மெல்ல பெருகி இன்று காலை ஏரியின் கரை உடைந்தது
இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை முழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது. ஏரியில் ஏற்பட்டுள்ள உடைப்பின் காரணமாக ஏரியில் உள்ள நீர் முழுவதும் வெளியேறிவிடும் என அரும்பாவூர் பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், சுமார் 500 ஏக்கர் பரப்பிலான நெல்வயல்களை வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்கால அடிப்படையில் செயல்பட்டு ஏரியின் உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.