Perambalur: Farmers protest by wearing headscarves and covering their ears at the sugar mill’s council meeting!

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 47வது ஆண்டு பேரவைக் கூட்டம், பெரம்பலூரில் நடந்த போது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் முக்காடு அணிந்து காதை மூடிக்கொண்டு போராட்டம் நடத்தி சர்க்கரைத்துறை ஆணையரிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்தனர். அதில்,

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தித் திட்டம் தொடங்க 31.12.2010 அன்று (தொழில்துறை அரசாணை எண்-189) அரசாணை பிறப்பித்து 8 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கிய நிதியை பங்காக மாற்றியதனால் இதுவரை எத்தனால் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பெரம்பலூர் சர்க்கரை ஆலையை லாபம் ஈட்டும் வகையில் இயக்க அரசு உடனே நிதி ஒதுக்கி எத்தனால் உற்பத்தி திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் போட்ட பங்கு மூலதனத்தை குறைக்க மாட்டோம் என சர்க்கரைத் துறை அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை மீறி விவசாயிகளின் பங்கைக் 1% குறைத்ததை கண்டிக்கிறோம். விவசாயிகளின் பங்கு 46.41% ஆக மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கிட தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

அரசு மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஆலை நவீனப்படுத்தும் திட்டம், இணை மின் உற்பத்தி திட்டம் குறித்து 5-6-2010 அன்று 18 மாதங்களில் இத்திட்டம் செயல்படுத்திட டெண்டர் விட்ட வேலையை 13 ஆண்டுகள் காலதாமதமாக செயல்படுத்தியதால் ஏற்பட்ட வட்டி சுமையை தமிழக அரசே ஏற்று கொள்ள வேண்டும்,

ஒவ்வொரு ஆண்டும் ஆலை அபிவிருத்திக்காக வழிவகை கடனுக்காக அரசிடமிருந்து பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்டு வரும் கடன் சுமையை தள்ளுபடி செய்ய வேண்டும். அரசிடம் இருந்து பராமரிப்பிற்காக பெற்ற கடன்களை பங்காக மாற்றக்கூடாது.

தனலட்சுமி சர்க்கரை ஆலை, திரு ஆரூரான் சர்க்கரை ஆலைகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக பதிவு செய்து கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கரும்பிற்குரிய கிரயத் தொகையை குறித்த காலத்தில் முறையாக அந்த இரு ஆலைகளும் வழங்காததினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி அந்த இரு ஆலைகளுக்கு வரும் அரவைப் பருவத்திற்கு பதிவு செய்துள்ள கரும்புகளை பதிவு மாற்றம் செய்து பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9142 விவசாயிகளிடம் இணை மின் உற்பத்தி திட்டத்திற்காக பங்காக பிடிக்கப்பட்ட தொகை ரூ.7,87,75,000 மற்றும் இந்தத் தொகைக்கான வட்டி ரூ.2,27,09,222 ம் சேர்த்து ரூ.10,14,84,222 விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அரவைப் பருவத்தின் போது பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு உடனுக்குடன் கரும்புக்குரிய தொகை வழங்கப்பட்டது போன்று வரும் அரவைப் பருவங்களிலும் தாமதம் இன்றி உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த வேணுகோபால் தமிழக விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் ஆர். ராஜா சிதம்பரம் எஸ்.கே செல்லத் கருப்பு, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!