Perambalur: Farmers suddenly entered the Collector’s office and staged a protest, demanding a fair price for maize!

தமிழ்நாட்டில் மக்காசோள உற்பத்தியில் முன்னணி மாவட்டங்களில் ஒன்றான பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது மக்காசோள அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு மக்காசோளத்திற்கு மத்திய வேளாண் விலை நிர்ணய ஆணையம் குவிண்டால் ஒன்றுக்கு 2400 ரூபாய் ஆதார
விலையாக அறிவித்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு குவிண்டால் மக்காசோளத்தை அதிகபட்சமாக ரூ 1600- கொடுத்து தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வரும் வியாபாரிகளும் சிண்டிகேட் அமைத்து கொண்டு ரூ.1700-க்கு கீழ் மட்டுமே கொள்முதல் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனை துறையினர் ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள், வியாபாரிகளுடனான முத்தரப்பு பேச்சு வார்த்தையிலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து மக்காசோளத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2400 கொள்முதல் விலை அறிவித்து அதை நிறைவேற்றாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூரில் இன்று அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவிலிருந்து வரிவிலக்குடன் மக்காசோளத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ள மத்திய அரசைகண்டித்தும், தனியார் வியாபாரிகளின் மோசடி கொள்முதலை கட்டுப்படுத்த தவறிய மாநில அரசையும் கண்டித்து கோஷமிட்டனர். மேலும் வேளாண் விளை பொருட்களின் மீதான மத்திய அரசின் விலை நிர்ணயத்தை சட்டமாக்கிட வலியுறுத்திய விவசாய சங்கத்தினர் , மத்திய அரசின் நாஃபெட் மூலம் மக்காசோளத்தை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தினர். இது மட்டுமின்ற கர்நாடகாவில் மத்திய அரசு அறிவித்துள்ள 2400 ரூபாய் விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையே விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டு தொகையினை அவர்களது வங்கிக் கணக்கில் கர்நாடகா அரசு நேரடியாக வரவு வைத்துள்ளதை போன்று தமிழக அரசும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மக்காசோள விவசாயிகளின் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கை அரசின் கவனத்திற்கு சென்றடைய வேண்டி மக்காசோள கதிர்களை கழுத்திலும் மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மக்காசோளத்தை சாலையில் கொட்டிய பெண் விவசாயிகள் அதை சுற்றிவந்து ஒப்பாரி வைத்து தங்கள் வேதனைய அரசுக்கு நூதன முறையில் தெரிவித்தனர். இதனிடையே விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த டி. ஆர்.ஓ கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!