Perambalur; Gender Resource Center; Inaugurated by the Collector in the presence of MLA and Union Chairman!

பெரம்பலூர் யூனியன் அலுவலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாலின வள மையத்தை (வானவில் மையம்) கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன், சேர்மன் மீனா அண்ணாதுரை முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை (International Day for Elimination of Violence against Women) முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய பாலின பிரச்சாரம் நிகழ்வினை, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பார்வையிட்டனர்.

பாலின வள மையமானது (வானவில் மையம்) வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கான உதவிகளையும். சட்டரீதியான வழிகாட்டுதல்களையும் வழங்கும். குழந்தைத்திருமணம், குடும்ப வன்முறைகள், தனிநபர் வன்முறைகள் போன்றவைகளால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு வழிகாட்டும் இடமாகவும் இந்த பாலின வள மையங்கள் செயல்படும்.

சுய உதவிக்குழுவினர் ஒருவர் மேலாளர் நிலையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். 24 மணி நேரமும் இந்த மையம் செயல்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்க சட்ட ஆலோசகர்கள் உதவி செய்வார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை மையமும் இதில் செயல்படும்.

இம்மையத்தின் மூலம் சட்ட உதவி ஆலோசனை, மறுவாழ்வு மையம், பாலின உணர்வுதிறன், மாற்றுத்திறனாளிகள் முகாம், மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை உள்ளிட்ட சேவைகளும், பாலியல் தாக்குதல், குடும்ப நல ஆலோசனை, குழந்தைகளுக்கான ஆலோசனை, திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்படும்.  பாதிக்கப்பட்டவர்கள் இரவு நேரங்களில் வரும்போது அவர்கள் இந்த பாலின வள மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் இந்த பாலின வள மையங்கள்  செயல்படுவதால், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று முதல் 25.12.2024 வரை ஒரு மாத காலத்திற்கு வன்கொடுமைகள் குறித்தும், அதை எதிர்கொள்ளும் விதம் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்புகள் குறித்தும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படங்களும் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்படவுள்ளது. 

வேப்பூர் வட்டாரத்தில் பாலின வளமையமானது (வானவில் மையம்) கடந்த ஆண்டிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இன்று பெரம்பலூர், ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்களில் பாலின வள மையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவர்கள் 04328-275280 என்ற எண்ணிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவர்கள் 04328-291394 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவர்கள் 04328-275238 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

முன்னதாக, பாலின வன்முறைக்கு எதிரான வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகை ஏந்திய மகளிர் சுய உதவிக்குழுக்களின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, பி.டி.ஓ.க்கள் செல்வகுமார், பூங்கொடி பெரம்பலூர் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!