Perambalur: Grant raised for renovation of churches; Collector information!
பெரம்பலுர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணிமேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிப்பெருக்கி. நற்கருணை பேழைபீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள், பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள கூடுதலாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவாலய கட்டிடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருப்பின் 02 லட்சத்திலிருந்து 10 லட்சமாகவும், 15 முதல் 20 வருடம் வரை இருப்பின் 04 லட்சத்திலிருந்து 15 லட்சமாகவும், 20 வருடத்திற்கு மேல் இருப்பின் 06 லட்சதிதிலிருந்து 20 லட்சமாகவும் தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதிஉதவி இரு தவணைகளாக மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிறித்துவ தேவாலயங்களில் பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தினை அனைத்து கிறித்துவ அமைப்பைச் சார்ந்த தேவாலய பாதிரியார்கள் பயன்படுத்தி பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.