Perambalur: How to protect horticultural crops during rainy season? Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமைக்குடில் மற்றும் நிழல் வலைக்குடில் அமைத்துள்ள விவசாயிகள் அவற்றின் அடிபாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கவும் மற்றும் அருகில் இருக்கும் மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மேலும், பிரதான பழப் பயிர்களான மா, எலுமிச்சை, கொய்யா, பப்பாளி, வாழை பயிரிடப்படும் விவசாயிகள் மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும் மற்றும் தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். திராட்சை பயிரிடும் விவசாயிகள் கொடியின் அடிப்பகுதியை மண் அணைத்துவிட்டு, திராட்சை கொடியில் போர்டோ கலவை பசையினை பூசி பின்பந்தல் அமைப்பில் நன்கு கட்ட வேண்டும்.
இச்செயல் முறைகளை பின்பற்றி வாழை பயிரிடும் விவசாயிகளும், காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண் அணைக்கவும். மேலும் சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும் மற்றும் வாழைத்தார்களை முறையாக மூடி வைத்து 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்து விட வேண்டும்.
இதர தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி, மஞ்சள், கருணைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர்ப்பாசனம் (ம) உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்கவும்.
இறுதியில் கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் அணைத்துவிட்டு பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி தேவையான தொழுஉரம் இட வேண்டும். மேலும் அனைத்து வயல்களிலும் பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி விவசாயிகள் தங்கள் தோட்டக்கலை பயிர்களை மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.