Perambalur: In Veppanthattai taluk, officials including the Collector conducted a field survey in the “Ungali Thedi Ungal Ooril” project!

பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் இன்று வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சியில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் அரசின் திட்டப் பணிகள், அடிப்படை வசதிகள் குறித்து கள ஆய்வில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காணக்கூடிய மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்னர், ஊர்ப்புற நூலகத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும், வாசகர் வருகை உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும், பார்வையிட்ட கலெக்டர், போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான புத்தகங்கள் போதிய அளவில் உள்ளதா என்பது குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, வி.ஏ,ஓ. ஆபிசில் பராமரிக்கப்படும் கிராம கணக்குப் பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து பட்டா மாற்றம் மற்றும் திருத்தம் தொடர்பாக இணையவழியில் பதிவு செய்யப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவும், கோனேரி ஆற்றின் வரத்து வாய்க்காலை பார்வையிட்டு ஆற்றில் முட்புதர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ரேசன் கடை எண் 1ல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு நிலை மற்றும் தரம் குறித்தும், மின்னணு குடும்ப அட்டை மற்றும் கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, குழந்தைகள் நல மையங்களில், வருகை பதிவேடு, உணவின் தரம் குறித்தும், தொடக்கப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவு, அடிப்படை வசதிகள், மதிய உணவின் தரம், பொருட்களின் இருப்பு நிலை குறித்தும் ஆய்வு செய்தார் . 4 ஆம் வகுப்பு கணித பாட வேளையில் மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதனை செய்திடும் வகையில் மாணவியை கரும்பலகையில் எழுதச்சொல்லி ஆய்வு செய்தார்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து, உணவினை வழங்கினார். அடிப்படை வசதிகள் குறித்தும், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவிகள் சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை பதிவு செய்யும் இடம், தொற்றா நோய் பிரிவு, ஆய்வகம், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, மருந்து இருப்பு அறை, ஸ்கேன் அறை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களிடம் கள ஆய்வின் போது, பொதுமக்களின் கருத்துகள், தேவைகள், அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைந்துள்ளதா என்றும் தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளில், வாலிகண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் பவானி ரெங்கராஜ் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!