Perambalur: Kalaignar Craft Scheme; Bank loan assistance with subsidy for craft artists! Collector’s information!!
சமுகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு அரசு கலைஞர் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூபாய்.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் வங்கிக் கடனுதவியும், 2 முதல் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட 25 கைவினைத்தொழில்களில் குறைந்தபட்சம் 5 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
கலைஞர் கைவினை திட்டத்தில் கட்டிட வேலைகள், நகை செய்தல், மர வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை போன்ற தொழில்கள், துணி வெளுத்தல் / தேய்த்தல், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல், மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல்,பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், சுதை வேலைப்பாடுகள், படகு தயாரித்தல், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள கைவினை கலைஞர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.