Perambalur: Koneripalayam – Veppanthatti new road will be surveyed; Minister AV Velu information!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் – பூலாம்பாடி – கள்ளப்பட்டி சாலை இடை வழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு, கலெக்டர் கிரேஸ் பச்சாவ், தலைமையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில்
இன்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்டந்தோறும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் கள ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறார். அதனடிப்படையில், வேப்பந்தட்டை நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் – பூலாம்பாடி – கள்ளப்பட்டி சாலை ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் இடை வழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல் மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதை தாழை நகர் அருகே தார் தளத்தின் கனம் மற்றும் சாய்வு விகிதம் ஆகியவற்றை அளவிட்டு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். சாலை அரசின் திட்ட மதிப்பீட்டின் படி. அமைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் மற்றும் மருத்துவமனை விரிவாக்க கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் 180 கிலோமீட்டர் சாலைகளை விரிவுபடுத்தும் பணிகளுக்காக ரூ.138 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிதியின் மூலம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் – பூலாம்பாடி – கள்ளப்பட்டி இடை வழித்தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்தப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து இன்று திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதை விட சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 – 25ஆம் நிதி ஆண்டிற்கு 37 கிலோமீட்டர் சாலைகள் அகலப்படுத்துதல், 3 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்கள் விரிவு படுத்துவதற்காகவும் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் 91 கிலோமீட்டர் ஊராட்சி ஒன்றிய சாலைகள் தரம் உயர்த்தி மேம்படுத்துவதற்காக ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலை 30 கிலோமீட்டர் தொலைவிற்கு அகலப்படுத்துவதற்கு குரும்பலூர், நகரப் பகுதியில் இருந்து மாற்றுப்புறச் சாலை அமைப்பதற்காக ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சாலைகளை விரிவுபடுத்தி, தரமான சாலைகள் அமைப்பதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 27 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 456 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 11,721 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க நாளை வருகை தர உள்ளார்.
மேலும், பொதுப்பணித்துறையை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 40 பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்து இதுவரை 32 பணிகள் முடிவு பெற்றுள்ளது. 2 பணிகள் நடைபெற்று வருகிறது. 6 பணிகள் துவக்க நிலையில் உள்ளது. மிக விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவமனைகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ரூ.20 கோடி நிதி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஒதுக்கியுள்ளார்கள். அதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி முதல் கை.களத்தூர் வழியாக வேப்பந்தட்டை வரை செல்லும் சாலையினை விரிவுபடுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். பெரம்பலூர் முதல் ஆத்தூர் வரை உள்ள சாலை மிக முக்கிய சாலை ஆகும். பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துகள் அதிகம் செல்லும் இச்சாலையை தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக டிபிஆர் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிவுற்றதும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு பின்னர் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
கோனேரிப்பாளையம் – வேப்பந்தட்டை புதிய சாலை குறித்து ஆய்வு செய்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கும் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. அதுபோன்று அரசு ஊழியர்களுக்கும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் அனைவரும் அறிவார்கள். மேலும் மத்திய அரசு அகவிலைப்படி அறிவித்த உடனே நம்முடைய முதல்வரும் அகவிலைப்படி உயர்வு அளித்து அரசு ஊழியர்களின் பாதுகாவலனாக திகழ்ந்து வருகிறார்கள். இந்த அரசு பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது, என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் ரூ.779.83 லட்சம் மதிப்பீட்டில் குன்னம் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் சின்ன வெண்மணி கிராமத்தில் கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, பணிமனை, வகுப்பறை மற்றும் நிர்வாக கட்டிட பணிகளை ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், திமுக மாநில பொறியாளர் அணி பரமேஸ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ தவரகூர் துரைசாமி, வேப்பந்தட்டை சேர்மன் ராமலிங்கம், ஒன்றிய செயலளார் நலலத்தம்பி அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.