Perambalur: Loan assistance through Tamil Nadu Backward Economic Development Corporation; Collector information!
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுகள் உள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.
விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் / வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7% மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரை 8% ஆகும். குழுக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில் /வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
சுய உதவிக்குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருபாலருக்கான சுய உதவிக்குழு (Mixed Self Help Group) உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/-வீதம் 02 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7% ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்கழக இணையதள முகவரியில் (WWW.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.