Perambalur: Masked gang cuts down sandalwood tree from house in pouring rain and steals it! Police search for it!
பெரம்பலூர் நகரில் வீட்டின் முன் பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த சந்தன மரம் வெட்டி கடத்தல்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம், ஜெனிஃபர் நகரை சேர்ந்தவர் கோவிந்தன்-பூங்கோதை தம்பதியினர்.
இவர்களின் மகன் பாரதி (40), சாப்ட்வேர் துறையில் பணியாற்றி வரும் இவர் தேனீக்கள் வளர்ப்பு மூலம் தேன் உற்பத்தியும் செய்து வருகிறார். பெரம்பலூரில் உள்ள தனது வீட்டின் முன் காம்பவுண்ட் சுவருக்குள் அரசின் உரிய அனுமதி பெற்று சந்தன மரம் ஒன்றை கடந்த 13 ஆண்டுகளாக வளர்த்து வந்தார்.
இவரது தாயார் பூங்கோதை வீட்டினுள் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் கொட்டும் மழையிலும், முகமூடி அணிந்து கொண்டு குடை பிடித்தபடி வந்த 3 பேர் வீட்டின் முன் பகுதியிலும், பக்கவாட்டு பகுதியிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியும், வானத்தை நோக்கி வைத்து விட்டும், பேட்டரியில் இயங்கும் கட்டிங் மெஷினை வைத்து வீட்டின் முன் பகுதியில் இருந்த 20 இன்ச் சுற்றளவும் 18 அடி உயரமும் கொண்ட சந்தன மரத்தை வெட்டி கடத்தி எடுத்து சென்று விட்டனர். மரத்தின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
சந்தன மரம் வெட்டப்பட்டது குறித்து, பாரதி இன்று காலை பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும், தடயங்கனை வைத்து சந்தன மர கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அதன் உரிமையாளர் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்திஉள்ளது.