Perambalur: Micro, Small and Medium Enterprises Udayam Registration Certificate: Collector Information!
மத்திய அரசு 2020-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவற்றின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் ஆகிய இரட்டை கூட்டு அளவுகோலின்படி
வகைப்படுத்தப்படுகின்றன.
இந்நிறுவனங்கள் உத்யம் பதிவுச்சான்றிதழ் பெறுவது மூலம் தம் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்துகொள்ளலாம். இணையதளம் மூலம் உத்யம் பதிவு செய்வது மிக எளிய செயல்முறைகளை கொண்ட கட்டணமில்லா செயல்முறையாகும்.
ஆதார் எண், அதனுடன் இணைக்கப்ட்ட செல்போன் எண், பான்கார்டு எண் இருந்தால் தமது உற்பத்தி, வணிக அல்லது சேவை தொழில் நிறுவனத்துக்கு அரசுரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பும் எவரும் udayamregistration.gov.in என்ற இணையதளத்தினுள் சென்று மிக எளிதாக, தாமகவே உத்யம் பதிவுச்சான்றிதழ் பெறலாம். பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் மூலம் உத்யம் பதிவு செய்வது குறித்த விவரங்கள் வழங்குவதோடு தேவைப்படுவோருக்கு உத்யம் பதிவுச்சான்றிதழ் இணையவழி பெற ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் வழங்குகின்றன. இது தவிர வங்கிகளும் Udyam Assisted Filing முறை மூலம் உத்யம் பதிவுச்சான்றிதழ் பெற உதவுகின்றன.
உத்யம் பதிவு கட்டாயம் இல்லை எனினும் அதனால் கிடைக்கும் பயன்கள் மிகுதி. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், உதவிகளை பெறவும், அவை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன்பெறவும் உத்யம் பதிவுச் சான்றிதழ் அடையாள அட்டையாகிறது. அரசு கொள்முதலில் பங்கு பெறவும், நிலுவைத் தொகைகளை உரிய
காலக்கெடுவுக்குள் வழங்காமை குறித்த வழக்குகளை பதிவுசெய்யவும், விற்பனை தொகை உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்வதான TReDS தளத்தில் பதிவு செய்யவும் உத்யம் பதிவுச் சான்றிதழ் அவசியமாகின்றது. இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி, முன்னுரிமைக் கடன் முறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்கள் இயந்திர தளவாட முதலீட்டுக்கான பருவக்கடன் பெறவும் நடைமுறை மூலதனத்துக்கான கடன் பெறவும் உத்யம் பதிவு ஒரு துருப்புச்சீட்டாக அமைகிறது.
அங்கீகரிக்கப்படாத, அமைப்பாக வரையறுக்கப்படாத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைப்பாக ஒழுங்குப்படுத்தப்படவும் அரசின் அங்கீகாரம் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள், நிதி மற்றும் நிதி சாராத உதவிகள் பெறவும் உத்யம் பதிவுச் சான்றிதழ் மிக அவசியமாகிறது.
இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், 3.12.2024 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதுவரை உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்கள் இப்பதிவின் தேவை மற்றும் பதிவினால் பெறத்தக்க பயன்களை அறிந்து உத்யம் பதிவுச் சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.