Perambalur: Milk powder factory in Padalur at Rs. 150 crore; 11 districts will benefit; Collector Visits!

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் திருவிளக்குறிச்சியில் ரூ.150 கோடி மதிப்பில் 60 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் இன்று பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பால் கையாளும் வகையில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ரூ.150 மதிப்பீட்டில் நிறுவப்படும் என 13.04.2024 அன்று நடைபெற்ற பால்வளம் தொடர்பான மானிய கோரிக்கையில் பால்வளத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை அமைப்பதற்கான அரசாணை 03.03.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 2022-23ஆம் ஆண்டிற்கான ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கடன் உதவியுடன் தொழிற்சாலை நிறுவுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணியானது 18.10.2023 அன்று துவங்கப்பட்டு தொழிற்சாலையின் மொத்த பரப்பான 8,000 சதுர மீட்டரில் தற்சமயம் 2,800 சதுர மீட்டர் பரப்பிற்கு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையானது 7 தளங்களுடன் 43 மீட்டர் உயரத்தில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து நாளொன்றுக்கு 10 லட்சத்து 32 ஆயிரத்து 533 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 4,39,684 பால் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 6 லட்சம் லிட்டர் உபரி பாலாக உள்ளது. இப்பாலை பயன்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டும் உபரி பாலில் இருந்து பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் முழுசத்து பால் பவுடர், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் பவுடர், டெய்ரி ஒயிட்னர் மற்றும் வெண்ணெய் தயாரிக்கும் வசதிகளுடன் தமிழகத்தில் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அமையும். இதன் வாயிலாக பெரம்பலூர் மாவட்டம் உட்பட 11 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்.

வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.6.98 கோடி மதிப்பீட்டில் 100 மாணவியர்கள் தங்கும் வகையில் 25 அறைகள், விடுதி காப்பாளர் அறை, முதலுதவி அறை, உணவருந்தும் கூடம், சமையல் அறை, இருப்பு அறை(store room), சமையல் எரிவாயு இருப்பு அறை, மின்தூக்கி வசதியுடன் கட்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதியின் பணிகள் முன்னேற்றம் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!