Perambalur: Mobile Veterinary Service; Contact number 1962 collector information!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ சேவையின் ஊர்தியினை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஓட்டுநர்களிடம் சாவியினை வழங்கினார். 

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவ நிலையங்களில் இருந்து தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ சேவை வழங்கிட சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தி கால்நடைகளை பாதுகாத்திடும் பொருட்டு 20.08.2024 அன்று நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவையினை சென்னையில் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிதாக 2 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கால்நடை மருத்துவ ஊர்தியில் 1 கால்நடை மருத்துவர், உதவியாளர், ஓட்டுநர், கால்நடைகளின் நோய்களை ஆய்வு செய்யக்கூடிய வசதிகள், செயற்கை முறை கருவூட்டல் பணிக்கான உபகரணங்கள் மற்றும் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான வசதிகள் ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நடமாடும் கால்நடை ஊர்தியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் வரவேற்று, வாகனத்தின் செயல்பாடுகள் மற்றும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்து, இவ்வூர்தியின் சாவியினை இரண்டு கால்நடை மருத்துவக்குழுவின் ஊர்தி ஓட்டுநர்களிடம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் கால்நடைகளுக்கு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து ஊர்தியினை பார்வையிட்டார்.

இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 08.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை வரையறுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் பணிகள் மேற்கொள்ளப்படும். மாலை 02.00 மணி முதல் அவசர அழைப்பிற்கு ஏற்ப பணி நேரங்களில் மாற்றம் இருக்கும்.

      அதன்படி, நடமாடும் மருத்துவ சிகிச்சை ஊர்தி – 1  (நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி எண்  -  TN  09 G3231)  வேப்பந்தட்டை தலைமை இடமாக கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும். வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளான அரசலூர் மற்றும் விஸ்வக்குடி ஆகிய கிராமங்களில் திங்கள் கிழமைகளிலும், பிம்பலூர் மற்றும் காரியானூர் ஆகிய கிராமங்களில் செவ்வாய் கிழமைகளிலும், திருவாளந்துறை மற்றும் எறையூர் ஆகிய கிராமங்களில் புதன் கிழமைகளிலும், பாண்டகப்பாடி மற்றும் பில்லாங்குளம் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமைகளிலும், மலையாளப்பட்டி மற்றும் கொட்டாரக்குன்று ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமைகளிலும், பெரியம்மாபாளையம் மற்றும் உடும்பியம் ஆகிய கிராமங்களில் சனிக் கிழமைகளிலும் காலை 08.00 மணி முதல் 02.00 மணி வரை முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபால நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி – 2 (நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி எண் – TN 09 G3258) ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட செட்டிக்குளம் தலைமை இடமாக கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும். ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கண்ணாப்பாடி மற்றும் தேனூர் ஆகிய கிராமங்களில் திங்கள் கிழமைகளிலும், நாரணமங்கலம் மற்றும் காரை ஆகிய கிராமங்களில் செவ்வாய் கிழமைகளிலும், சாத்தனூர் மற்றும் அருணகிரிமங்கலம் ஆகிய கிராமங்களில் புதன் கிழமைகளிலும், ராமலிங்கபுரம் மற்றும் ஜமீன் ஆத்தூர் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமைகளிலும், நொச்சிக்குளம் மற்றும் ஜமீன் பேரையூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமைகளிலும், எலந்தங்குழி மற்றும் ஆதனூர் ஆகிய கிராமங்களில் சனிக் கிழமைகளிலும் காலை 08.00 மணி முதல் 02.00 மணி வரை முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளுக்கான அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள மற்றும் உதவிகளுக்கு கால்நடை அவசர அழைப்பு எண் ”1962” மூலம் மாலை 02.00 மணி முதல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

     மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எஸ்.பகத்சிங்,  கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநர் சங்கர நாராயணன், உதவி இயக்குநர்கள் தமிழரசு, குமார், கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!