Perambalur: MP Arun Nehru provided welfare assistance worth Rs.1.18 crore.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் எம்.பியுமான அருண்நேரு தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளின் விவரங்கள், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்), தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மாவட்ட தொழில் மையம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டம், மத்திய நிதிக்குழு மானியம், தூய்மை பாரத இயக்கம் / நகர்ப்புறம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பயிர் கடன் அட்டை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வழ்வுத்துறை உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பெரம்பலூர் எம்.பி அருண்நேரு விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
அரசுத் திட்டங்களின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுதுதப்பட்டுள்ளதா என்றும், பயன்பெற்ற பயனாளிகளின் விபரங்கள் குறித்தும், ஒவ்வொரு திட்டத்திற்குமான இலக்கீடுகள் முழுமையாக எய்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார்.
பின்னர் எம்.பி அருண்நேரு தெரிவித்ததாவது:
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன். பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரயில் போக்குவரத்திற்கான திட்டத்தை கொண்டுவர முழுமுயற்சி எடுக்கப்படும். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் குறித்து இந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிக நேரம் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை ஆழப்படுத்தி தூர் வாரி, நீர்நிலைகளை மேம்படுத்தி நீர் மேலாண்மையினை முறையாக செயல்படுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் பட்டியலிலேயே பெரம்பலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக்கல்லூரி அறிவிப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடம், அமைச்சர் பெருமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல அரசின் திட்டங்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த கோரிக்கைகளை எனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன், என இவ்வாறு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, வருவாய்த் துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் எளம்பலூர் எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் திருநங்கைகள் இரண்டுபேர் உள்பட 46 பயனாளிகளுக்கு ரூ.21,00,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பீட்டில் இயற்கை மரண நிவாரண உதவித் தொகைக்கான ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 17 பயனாளிகளுக்கு ரூ.2,82,000 மதிப்பீட்டிலும், தாட்கோ மூலம் மகளிர் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரு.32,20,000 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சுயதொழில் வங்கி கடன் வழங்கும் திட்டம் மற்றும் 3 சக்கர வாகனம் வழங்குதல் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,90,200 மதிப்பீட்டிலும்,
மகளிர் திட்டம் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.24,00,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை இடுப்பொருள் மற்றும் விதைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 17 பயனாளிகளுக்கு ரூ.7,48,990 மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.4,61,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.21,06,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.1,18,08,190 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் ந.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), மீனாஅண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), க.இராமலிங்கம் (வேப்பந்தட்டை), மற்றும் அனைத்து பேரூராட்சிகளின் தலைவர்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அனைத்து அரசுத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.