Perambalur police reveal that a person who was admitted to the hospital died due to assault.

பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே உள்ள கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் செங்கமலை மற்றும் நாராயணசாமி. இருவரும் பங்காளிகள். இவர்களுக்கு பெரம்பலூர் சாலையில் உள்ள நிலத்தில் 16 சென்ட் நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நீதிமன்றத்தில் வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அடிதடி வழக்குகளும் இரு தரப்பினர் மீதும், பெரம்பலூர் காவல் நிலையத்தில் உள்ளன.

இந்நிலையில் நேற்றிரவு சுமார் 8.30 மணி அளவில், நாரயணசாமி வீட்டிற்கு சென்ற செங்கமலை மகன் செல்வம் (40) மது போதையில், கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உறவினர்கள் செல்வத்தை பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில், விபத்து என தகவல் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் செல்வம் உயிரிழந்தார். இதில் சந்தேகமடைந்த பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணையை நடத்தினார்.

செல்வம் விழுந்ததாக கூறப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில், ரத்தம் அளவு வித்தியாசம் இருந்தது. மேலும், அங்கே கிடந்த மூங்கில் குச்சியில் ரத்த கரையும் அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர், போலீசார் நாராயணசாமி மனைவி செல்லம் மற்றும் அவரது மகன் ராஜாராம் (24) இருவரிடம் தனித்தனியாக நடத்திய தீவிர விசாரணையில் ராஜாராம் உண்மையை தெரிவித்தார்.

நேற்றிரவு குடிபோதையில் அத்துமீறி வீட்டிற்கு வந்த செல்வம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் பேசியதோடு, ராஜாராமின் தாயையும் தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் அங்கிருந்த மூங்கில் தடியை எடுத்து தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்ததாகவும், பின்னர் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல கூறியதாகவும் தெரிவித்தனர்.

பின்னர், ராஜாராமை கைது செய்த போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை சம்பவத்தை துப்பு துலக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் பெரம்பலூர் போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!