Perambalur: Power tiller and power weeder at subsidized prices for farmers: Collector information!
நடப்பு 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் 4,000 பவர் டில்லர்கள். 4000 விசைக்களையெடுக்கும் கருவிகள் (பவர் வீடர்) வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம், சைக்களையெடுப்பான்களுக்கு அதிக பட்சமாக ரூ.63,000 அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இத்திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்மானியத்துடன் 20 சதவிகித கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வாங்கிட 20 சதவிகித கூடுதல் மானியமாக ரூ.48,000/-ம், விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200/-ம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பவர் டில்லர்கள் வாங்கிட அதிக பட்சமாக ரூ.1,68,000/-ம், விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ,88,200/- வரை மானியம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக பவர் டில்லரின் மொத்த விலை தோராயமாக ரூ.2,40,000/- எனில் ரூ.1,68,000/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.72,000/- மட்டும் செலுத்தினால் போதும். விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ.1,30,000/- எனில் ரூ.88,200/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.41,800/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் இம்மானியத்தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.
பொது பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவிகித கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ.12,600/- விசைக்களை எடுக்கும் கருவி வழங்கப்படுகிறது. எனவே, ஒட்டு மொத்தமாக விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.75,600/- வரை மானியம் பொது பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை ரூ.80,000/- எனில் ரூ.48,000/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.32,000/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் இம்மானியத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.
விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையினை இணையவழி (RTGS/NEFT) அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவர் டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இதுதொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளார் அலுவலகம் அல்லது வட்டார அளவில் உதவி பொறியாளர் / இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.