Perambalur: Private employment camp: 4232 people visit 20 thousand jobs; Minister Ganesan issued work orders to 522 people!
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில் தொடங்கி வைத்து, முகாமினை பார்வையிட்டார்.
பெரம்பலூர் எம்.பி. கே.என். அருண் நேரு முன்னிலை வகித்தார். தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் கொ.வீரராகவராவ், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ஆகியோர் தலைமை வகித்தனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பா.விஷ்ணுசந்திரன் திட்ட விளக்கவுரையாற்றினர். போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ் பசேரா, எம்.எல்.ஏ.க்கள் பெரம்பலூர் பிரபாகரன், துறையூர் ஸ்டாலின்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில், பெரம்பலூர் மற்றும் சென்னை காஞ்சிபுரம், ஓசூர், கோயமுத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 142 முன்னணி தனியார் நிறுவனங்களும் 3 திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டன.
முகாமில் 2,021 ஆண்களும், 2,211 பெண்களும் என மொத்தம் 4,232 நபர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 362 ஆண்களுக்கும், 159 பெண்களுக்கும், 01 மாற்றுத்திறனாளிக்கும் என மொத்தம் 522 நபர்களுக்கு உடனடி பணி நியமன ஆணைகளைதொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்த முகாமில் இரண்டாம் கட்ட தேர்வுக்கு 49 ஆண்களும், 58 பெண்களும் என மொத்தம் 107 நபர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கு 15 நபர்கள் விண்ணப்பம் வாயிலான விருப்பம் தெரிவித்துள்ளனர்.
முன்னோடி வங்கி மூலம் இரண்டு நபர்களுக்கு தலா ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கல்விக் கடனுதவிக்கான காசோலையினையும், ஒரு நபருக்கு சுயதொழில் தொடங்க ரூ.17 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலையினையும் அமைச்சர் கணேசன் வழங்கினார்.
முகாமில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பதிவு செய்யப்பட்டது. மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற நிறுவனங்களின் மூலம் சுயதொழில் தொடங்கும் வகையில் விருப்பமுள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் சுயதொழில் உருவாக்கும் திட்டத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சி வாய்ப்புகளுக்கு சேர்க்கை முகாமும், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் (OMCL) பதிவு வழிகாட்டுதல்கள், TNPSC, TNUSRB-Police, TRB,TET போன்ற அரசு பணி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கையும் நடந்தது.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்கள் குன்னம் சி.ராஜேந்திரன் (பெரம்பலூர்), தர்மன் ராஜேந்திரன் (திருச்சி), பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், துரைசாமி, யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை) உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.