Perambalur: Prize for helmet wearers; Collector order to fine those who do not wear!

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், எஸ்.பி ஆதர்ஷ் பச்சேரா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஒவ்வொரு மாதமும் சட்டம் ஒழுங்கு ஏற்பட வாய்ப்புள்ள சம்பவங்கள் குறித்தும் அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்படும். இரு சமூகத்தினரிடையே பல்வேறு சூழல்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அமைதி குழு அமைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

உரிய முன் அனுமதி இல்லாமல் நகரப்பகுதியில் அதிக அளவில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு முன் அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள் வைப்போர் மீதும், அச்சிடும் நிறுவனங்கள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட கலெக்டர், முன் அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பர பதாகைகளும் உரிய காலத்திற்குள் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

புதிய மற்றும் பழைய பேருந்துநிலையம் அமைந்துள்ள பகுதி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அனுமதி இல்லாமல் ஷேர் ஆட்டோக்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துகள் ஏற்பட்ட இடங்கள், எந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விரிவாக எடுத்துரைத்தனர். அவ்வாறு விபத்துகள் ஏற்பட்ட இடத்தில் இனிவரும் காலங்களில் விபத்து நடைபெறாமல் இருக்க என்ன வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒவ்வொரு பகுதி வாரியாக கலெக்டர் கேட்டறிந்தார்.

பெரும்பாலான விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், சாலை விதிகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளை வழங்க வேண்டும் என்றும், தலைக்கவசம் அணியாதவர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதோடு, மாநில நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்திய மாவட்ட ஆட்சியர், பல இடங்களில் வேகத்தடைகள் இருப்பதே தெரியாத வகையில் உள்ளது எனவே, ஏற்கனவே வேகத்தடைகள் இருக்கும் இடங்களில் அவற்றில் வெள்ளை வண்ணம் பூசவும், விபத்து நடக்க வாய்ப்புள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் சப்-கலெக்டர் சு.கோகுல், டி.எஸ்.பிக்கள் ஆரோக்கியராஜ், தனசேகரன் உள்ளிட்ட அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!