Perambalur: Public must follow preventive measures against monsoon-related diseases; Collector’s statement!

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு மற்றும் பிற கொசக்களால் பரவும் காய்ச்சல் நோய்கள் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய பல்வேறு தொற்று நோய்களைத் தடுக்கவும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், வீடுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் சிறிதளவு தண்ணீரிலும் உற்பத்தியாகக்கூடும். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

சுற்றுப்புறங்களில் தேவையற்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்ற வேண்டும். தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், காலி டப்பாக்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் கீழ்நிலைத் நீர்தேக்கத் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை வாரம் ஒருமுறை காலி செய்து நன்றாக சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

கொசு ஒழிப்புப் பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்போது, வீட்டினுள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சுகாதாரத்துறை பணியாளர்கள் தண்ணீர் சேமிப்பு பாத்திரங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்யும்போது, அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கி கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

வீடுகளைச் சுற்றிலும் புல், புதர்கள் மற்றும் களைகள் அதிகமாக வளராமல் அவ்வப்போது அகற்றி, சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும் உலர்வாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.தேவையற்ற பழைய பொருட்கள், கழிவுப் பொருட்கள், உடைந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை வீட்டைச் சுற்றி குவித்து வைக்காமல் முறையாக அகற்ற வேண்டும்.

வீட்டருகில் எலிகள் அண்டாதவாறு உணவுப் பொருட்களை மூடி வைத்தல், குப்பைகளை முறையாக அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் எலி மற்றும் பிற விலங்குகளின் சிறுநீர் அல்லது கழிவுகளால் மாசுபட்ட நீர் மற்றும் மண்ணுடன் தொடர்பு ஏற்படுவதன் மூலம் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். மேலும், புதர் மற்றும் களைப்பகுதிகளில் ஏற்படும் Scrub Typhus போன்ற நோய்களிலிருந்தும் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தனிநபர் சுகாதாரத்தை முறையாகக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும். குடிநீரை நன்கு காய்ச்சி, ஆறவைத்து குடிக்க வேண்டும். உணவு உண்பதற்கு முன்பும், மலம் மற்றும் சிறுநீர் கழித்த பின்பும் சோப்பு போட்டு தண்ணீரால் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் முன்பும் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை மூடி வைத்து, சுகாதாரமான முறையில் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட தனிநபர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் டைபாய்டு மற்றும் பல்வேறு நீர்வழித் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கண்களுக்குப் பின்னால் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் சுயமாக மருந்து உட்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு சுகாதார நிலையத்தை உடனடியாக அணுகி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுப்புழுக்கள் காணப்பட்டாலோ அல்லது காய்ச்சல் பாதிப்பு குறித்து தகவல் இருந்தாலோ உடனடியாக சுகாதாரத்துறை பணியாளர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.“நமது வீடு – நமது சுற்றுப்புறம் – நமது பொறுப்பு”என்ற உணர்வுடன் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, கொசு மற்றும் எலி உற்பத்தியைத் தடுப்பதுடன், பாதுகாப்பான குடிநீர் மற்றும் தனிநபர் சுகாதார பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.

“தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வோம் – கொசு உற்பத்தியைத் தடுப்போம் – டெங்குவை ஒழிப்போம்” மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து மேற்கொள்ளும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி, “நோயற்ற பெரம்பலூர் – நலமான பெரம்பலூர்” உருவாக்கிட வேண்டும் என அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!