Perambalur: Rs 386.38 crore loan disbursed for industrial development; Collector Information!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கான கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்விக்கடனுதவி வழங்கும் முகாம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2024-2025ம் நிதியாண்டில் ரூ.607.75 கோடி கடன் வழங்க ஆண்டு கடன் திட்ட அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.386.38 கோடி தொழில்முனைவோர்களுக்கு தொழிற்கடனாக இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நிறைவு செய்திட, காலாண்டுக்கு ஒருமுறை தொழில் கடன் வழங்கும் கூட்டம் தொழில் கடன் வழங்கும்  தொடர்புடைய துறைகளை ஒன்றிணைத்து மாவட்ட தொழில் மையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த காலாண்டில் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக கடனுதவிகள் வழங்கப்படுகின்றது.

அதே போல மாணவ மாணவிகளின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் கல்விக் கடனுதவிகளை வழங்கிட வேண்டும் என அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் நிதித்துறை அரசு செயலர் அவர்கள் தனி கவனம் செலுத்தி இத்திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளாகள். இங்கு வந்துள்ள வங்கியாளர்கள் அனைவரும், கல்விக்காக கடனுதவி கேட்டுவரும் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கடனுதவிகளை வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் சுய தொழில் செய்திட ஆர்வமுடன் முன்வரும் இளைஞர்களுக்கு வங்கிகள் உதவிட வேண்டும், என பேசிய கலெக்டர் கிரேஸ் பச்சாவ், 18 தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.37 கோடி மதிப்பிலான தொழிற்கடனுக்கான அனுமதி ஆணைகளையும், 61 நபர்களுக்கு ரூ.2.12 கோடி கல்வி கடன்களுக்கான ஆணைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் தொழில் முனைவோர், வணிகர், இளைஞர் மற்றும் மாணவர்கள் திறன் மேம்பாடு மற்றும் தகுதியும் வாய்ப்பும் உள்ள தொழில் வணிக திட்டங்களை கண்டறிதல், திட்ட அறிக்கை தயாரித்தல் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல், நிதி நிறுவனங்களின் தொடர்பில் இருத்தல் சந்தைப்படுத்துதல் மற்றும் வணிகம் தொடர்பான தகவல்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

  மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜெ.பிரபு ஜெயக்குமார் மோசஸ், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கீதா, மற்றும் வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!