Perambalur: Rural Development Department employees protest against the Collector!

பெரம்பலூர் கலெக்டரின் சர்வாதிகாரப் போக்கினையும், மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவரையும் தரக்குறைவாக நடத்தும் போக்கினையும் கண்டித்து, மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சி துறையினர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் கலெக்டராக இருக்கும் கிரேஸ் பச்சாவ் கடந்த ஜூலை மாதம் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிலிருந்து மாவட்டத்தில் உள்ள இரண்டாம் நிலை அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரையும் மதித்து பேசுவதில்லை என்றும், சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவது, அதிகாரிகளை பொது இடங்களில் தரக்குறைவாக நடத்துவது என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தது. இதனால் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய சென்ற ஆட்சியர் அங்கிருந்த பணியாளர்களை அவமதிக்கும் விதமாக பலரது முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், செய்யாத தவறுக்காக இரண்டாம் நிலையில் உள்ள அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை பலருக்கு முறையான காரணம் இன்றி மெமோ கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்டம் முழுவதிலும் தங்களது பணிகளை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிற்று வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வேறு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ஆட்சியர் அலுவலகம் வந்த நிலையில் தர்ணாவில் ஈடுபட்டவர்களை கடந்து செல்கையில் அவர்களை கண்டும் காணாமல் சென்றதால்,மேலும் அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள் கலெக்டர் கிரேஸ் பச்சாவை நேரில் சந்தித்து முறையிட்டனர். இதனை தொடர்ந்து அனைவரும் சரியாக பணியாற்ற வேண்டும், நானும் இது போல தரக்குறைவாக நடத்த மாட்டேன் என்று ஆட்சியர் உறுதி அளித்ததாகவும், ஆட்சியர் அவ்வாறு தெரிவித்ததால் தங்களது போராட்டம் வெற்றி பெற்றதாகவும் கூறி தர்ணாவை கைவிட்டு மதியத்திற்கு மேல் பணிக்கு திரும்புவதாகவும் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்களையே தரகுறைவாக பேசியதாக கூறி அவரை கண்டித்து அரசு அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!