Perambalur: Ryot Pattas for residents of Jamaliya Nagar, Labbaikudikadu; Collector’s information!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது கடந்த 24.06.2024 அன்று பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பென்னகோணம் (வடக்கு) கிராமம், ஜமாலியா நகரில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, ஜமாலியா நகர் பகுதியில் நத்தம் நிலவரித் திட்டப்பணிகள் மேற்கொண்டு குன்னம் வருவாய் வட்டாட்சியரால் ஜமாலியா நகரில் குடியிருந்து வரும் தகுதியான குடும்பங்களுக்கு மட்டும் ரயத்துமனைப் பட்டா வழங்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மனைப்பட்டாக்கள் பெறுவதற்கு நில உரிமைதாரர்களோ அல்லது அவரால் நியமிக்கப்படும் நியமனதாரர்களோ, நில அளவை அதிகாரிகள் நில அளவை செய்யும்பொழுது உடனிருந்து அவரவர் இடங்களுக்கான எல்லைகளை காண்பிக்க வேண்டும். மேலும் நில உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள பத்திரப்பதிவு ஆவணங்களை சமர்ப்பிக்கும்பட்சத்தில், உரிய அலுவலர்களால் அளவுப்பணி, புலத்தணிக்கை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேற்படி நில அளவைப்பணிகள் கோட்ட ஆய்வாளர், குன்னம் கோட்டம் நில அளவை அலுவலரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெறும். நில அளவை சம்பந்தமான அனைத்து மனுக்களும் கோட்ட ஆய்வாளர், குன்னம் கோட்டம் (நில அளவை), சார் ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர்-621212 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். எனவே, குன்னம் வட்டத்திற்குட்பட்ட பென்னகோணம் (வடக்கு) கிராமம் ஜமாலியா நகரை சார்ந்த நில உரிமையாளர்கள் இதன் வாயிலாக ரயத்து மனைப்பட்டாக்கள் பெற்று பயனடையலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.