Perambalur: Sensational verdict in 22-year-old case; 4 weeks in jail for the culprit; Rs. 10 thousand fine! SP praises the police for getting the punishment!
கடந்த 2003 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சிலை திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 4 வாரம் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.10000 அபராதம் விதித்து தண்டனை வழங்கிய சென்னை எழும்பூர் தலைமை பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு நேற்று வழங்கி உள்ளது.
கடந்த 2003 – ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம், கோவில்பாளையம் கிராமத்தில் உள்ள தோழிஸ்வரர் சிவன் கோவிலில் சிலை காணாமல் போனதாக, அக்கிராமத்தைச் சேர்ந்த செங்கமலை என்பவரின் மகன் ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் குன்னம் போலீசார் குற்றஎண். 216/2003-ன்படி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த, சடையப்பன் மகன் வெங்கடேசன் (40 வயது 2003ல் ) மற்றும் உடையார்பாளையம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் தங்கமணி ( 48 வயது 2003ல் ) இருவரும் சிலை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் நேற்று 13.06.2025-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளிகள் A1. வெங்கடேசன் இறந்த நிலையில், A2. தங்கமணி என்பவருக்கு 4 வாரம் சிறைதண்டனையும், ரூபாய் 10,000 அபராதத்தையும் விதித்து சென்னை எழும்பூர் தலைமை பெருநகரக் குற்றவியல் நடுவர், நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிக்கு தண்டனை பெற்றுத் தந்த குன்னம் போலீசாரை, எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.