Perambalur: Special Camp for Addition, Deletion Correction of Names in Electoral Roll; Collector Info!
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2025 என்ற நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 29.10.2024 முதல் 28.11.2024 வரை சிறப்பு சுருக்க திருத்தம் பணிகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளது.
இச்சிறப்பு சுருக்க திருத்த நடவடிக்கையினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி அடையும் புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும். இறப்பு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் விவரங்களான பெயர், உறவினர் பெயர், உறவு முறை மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றினை திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற உள்ள சிறப்பு சுருக்க திருத்தத்தின் போது வாக்காளர்கள். தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ (BLO) அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகத்திலோ மனு தாக்கல் செய்து கொள்ளலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு முகாம்களையும் நடத்திட அறிவுறுத்தியுள்ளது. இதன் பொருட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளிலும் மற்றும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளிலும் எதிர்வரும் 16.11.2024 (சனிக்கிழமை). 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் இச்சிறப்பு முகாம்களில் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அவர்களின் உதவியுடன் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளித்திடலாம்.
இவை தவிர இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க இனி ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர்-1 என ஆண்டுக்கு 4 நாட்களை தகுதி நாட்களாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே 17 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் 18 வயது பூர்த்தியானவுடன் பெயர் சேர்க்கப்பட்டு. பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.