Perambalur: Special camp for those without National Disability ID card! Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மகளிர் திட்ட பணியாளர்களை கொண்டு சமூக தரவு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை A, B & C என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு மொத்தம் 12,805 மாற்றுத்திறனாளிகள் என சமூக தரவு கணக்கெடுக்கப்பட்டது. இதில் A வகை மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளவர்கள் மற்றும் அவர்களது விவரங்கள் அலுவலகத்தில் தரவு தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. B வகை மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளவர்கள் மற்றும் அவர்களது முழுமையான தகவல்கள் அலுவலகத்தில் தரவு தளத்தில் சேமிக்கப்படவில்லை.
C வகை மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் இன்றி புதிய மாற்றுத்திறனாளிகளாக கணக்கெடுப்பாளர்களால் கண்டறியப்பட்டவர்கள். இந்த C வகையில் பெரம்பலுார் மாவட்டத்தில் 878 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
அதன்படி C வகை மாற்றுத்திறனாளிகள் 878 -நபர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கிட சிறப்பு முகாம்கள் வட்டார வாரியாக நடைபெற உள்ளது. அதன்படி ஆலத்துார் வட்டாரத்தில் 24.10.2024 அன்று செட்டிக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 25.10.2024 அன்று அடைக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 29.10.2024 அன்று மேலமாத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், குன்னம் வட்டாரத்தில், 05.11.2024 அன்று குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 07.11.2024 அன்று பெருமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 09.11.2024 அன்று முருக்கன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 12.11.2024 அன்று வேப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 14.11.2024 அன்று லப்பைகுடிக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பெரம்பலுார் வட்டாரத்தில், 16.11.2024 அன்று குரும்பலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 19.11.2024 மற்றும் 20.11.2024 ஆகிய இரு நாட்கள் பெரம்பலுார் அரசு தலைமை மருத்துவமனையிலும் நடைபெறவுள்ளது.
இது நாள் வரை தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத புதிய மாற்றுத்திறனாளிகளாக கணக்கெடுப்பாளர்களால் கண்டறியப்பட்டவர்களும் மற்றும் கண்டறியப்படாதவர்களும் கலந்து கொண்டு மருத்துவச் சான்று பெற்று தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்) 04 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.