Perambalur: Subsidized loan at low interest rate for landless SC, ST class to buy agricultural land; Collector Info!
தாட்கோ நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு, அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 % அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.
தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத் தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக்கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு 6 % மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியான www.tahdco.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கூடுதல் விபரங்களுக்கு பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.