Perambalur: Tahsildar push and shove clash with the people who came to petition in the people’s redress of grievance meeting!

நீதிமன்ற உத்தரவுபடி நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த கிராம மக்களை, ஒருமையில் பேசி வெளியே இடித்து தள்ளிய வட்டாச்சியரால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில் ஆலடி என்ற ஏரி உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட
இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் நீர் வர சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 12 அடி அகலமும் நான்கு அடி ஆழமும் கொண்ட வரத்து வாய்க்கால் இருந்து வந்துள்ளது.

சர்வே எண் 150 முதல் 156 வரை உள்ள இந்த வரத்து வாய்க்காலை கடந்த 2016 ஆம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து சமன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஆலடி ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் சில்லக்குடி கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

நீர் ஆதாரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதே ஊரை சேர்ந்த ஆராமுதன் என்பவர் நீர்நிலை வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் மனு அளித்துள்ளார்.

அந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆராமுதன் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 6 மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்ற அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆராமுதன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு மீதான விசாரணைக்கு ஆஜரான அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கை பொய்யானது என்றும், அறிக்கையில் தெரிவித்துள்ளத படி ஆக்கிரம்புகள் ஏதும் அகற்றப்படவில்லை என்றும் வழக்கறிஞர்கள் வாதாட அதன் உண்மை தன்மையை கண்டறிய கள ஆய்வு மேற்கொள்ளும்படி கமிஷன் அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சம்பந்தப்பட்ட பகுதியை கமிஷன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததில், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்பது உறுதியானதால் ஒரு மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில், ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஆராமுதன் உள்ளிட்ட சில்லக்குடி கிராம மக்கள் மனு அளிக்க வந்திருந்தனர்.

மனு அளிக்க வந்திருந்தவர்களை கண்ட ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி தன் இருக்கையை விட்டு எழுந்து ஓடிச் சென்று அவர்களை அதிகார தோணியில் தடுத்து நிறுத்தியதோடு, அரங்கை விட்டு வெளியே போ இங்க எதுக்கு வந்த என ஒருமையில் பேசி, இது மாதிரி மனு கொடுக்க வந்தீனா ஜெயிலுக்கு போயிடுவ என மிரட்டல் விடுத்து இடித்து தள்ளி அடாவடியாக நடந்து கொண்டார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த காவல்துறையினர் ஆராமுதன் உள்ளிட்டோரை வெளியே துரத்தினர். இதனால் விரக்தி அடைந்த ஆராமுதன் உள்ளிட்ட சில்லக்குடி கிராம மக்கள் கோரிக்கை மனுவை கொடுக் முடியாமல், விரக்தியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.

நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் என்ற சமூக அக்கறையோடு பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் ஆராமுதன் போன்ற பலரும் ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி போன்ற அரசு அதிகாரிகள் சிலரால் விரட்டி அடிக்கப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இதனை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பொதுமக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், அடாவடியாக நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தவறி விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே மனு அளிக்க சென்ற தன்னை வட்டாச்சியர் ஒருமையில் பேசி தாக்க முயன்றதாக ஆராமுதன் பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேராவிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!