Perambalur: Tahsildar, who was caught taking bribe, fled from the hospital and went into hiding; Police intensive search!
பெரம்பலூரில் தனியார் திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க 20ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரம்பலூர் துணை வட்டாட்சியர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தப்பி ஓடிய துணை வட்டாட்சியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தடையில்லா சான்று வழங்குவதற்கு தங்களுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று, துணை வட்டாட்சியர் பழனியப்பன் என்பவர் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து லஞ்சம் தர விரும்பாத தனியார் திருமண மண்டப மேலாளர் துரைராஜ் என்பவர் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அணுகியதை தொடர்ந்து அவர்களின் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த துரைராஜ், லஞ்ச பணத்தை கொடுக்க வந்திருப்பதாக துணை வட்டாட்சியர் பழனியப்பனிடம் தெரிவித்த போது, அவர் அங்கிருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை வாங்கி வருமாறு தெரிவித்ததை அடுத்து நல்லுசாமி ரூ.20 ரொக்க பணத்தை துரைராஜிடமிருந்து வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துணை வட்டாட்சியர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
அப்போது துணை வட்டாட்சியர் பழனியப்பன் நெஞ்சுவலிப்பதாக கூறியதை தொடர்ந்து அவரை நேற்று இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை துணை வட்டாட்சியர் பழனியப்பன் அரசு மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிறையில் அடைத்தனர். லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட துணை வட்டாட்சியர் ஒருவர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.