Perambalur: Tamil Nadu Chief Minister is working to improve students’ education – Minister Sivashankar’s speech at the free bicycle distribution ceremony!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்வை, குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் எம்.எல்.ஏம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர்நலப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நமது பெரம்பலூர் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச்சேர்ந்த 2,294 மாணவர்களுக்கும், 2,602 மாணவிகளுக்கும் என மொத்தம் 4,896 மாணவ மாணவிகளுக்கு ரூ.2,36,26,120 மதிப்பிலான மிதிவண்டிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் தொடக்கமாக இன்று குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 146 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாடு அடைவதற்காக நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப்போல வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படுவதில்லை. மக்கள் நலத்திட்டங்களை வழங்குவதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகின்றார்.
தமிழ்நாட்டில் பெண்பிள்ளைகள் உயர்கல்வி பயில பொருளாதாரம் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம்வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூட.1000 வழங்கும் ”புதுமைப்பெண்” என்ற திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். தற்போது, மாணவர்களுக்கும் இத்திட்டத்தை ”தமிழ்ப்புதல்வன்” என்ற பெயரில் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளார்.
கல்வி ஒன்றுதான் ஒருவரின் வாழ்க்கையினை முன்னேற்றும், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிடும்போது, ” படிக்காவிட்டால் என்ன, படிக்காதவர்களும் நாட்டில் முன்னேறியுள்ளார்கள், நாட்டை வழிநடத்தியுள்ளார்கள் என சிலர் உங்களுக்கு அறிவுரை சொல்வார்கள். உங்களின் கல்விக்கனவிற்கு முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு சொல்லுங்கள், படிக்காமல் சாதித்த ஒருவரை நீங்கள் சொன்னால், படிப்பால் சாதித்த நூறுபேரை என்னால் சொல்ல முடியும்” ஆகவே, கல்விதான் ஒருவரை சமுதாயத்தில் உயர்ந்தவராக மாற்றும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களின் நலன்கருதி திட்டங்களை வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நீங்கள் செய்யும் கைமாறு என்ன தெரியுமா, நன்றாக படிக்க வேண்டும். படித்து நல்ல மனிதர்களாக, சாதனையாளர்காக வாழ்வில் உயர வேண்டும் என்பதுதான்.
நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மாவட்டம் பச்சைமலையில் உள்ள ஒரு மாணவியின் வீட்டிற்கு சென்றார்கள். அவர் வசிக்கும் இடத்தில் செல்போன் டவர் கூட கிடைக்காத சூழல். முறையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், அந்த பழங்குடியினை மாணவி படித்து, NIT என்று சொல்லக்கூடிய தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் படிப்பதற்கு வாய்ப்பு பெற்றிருக்கின்றார். அவரைப் பாராட்டுவதற்காகவே, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கு வந்தார். அந்த மாணவியின் கல்விதான் அவரை அங்கு வரவழைத்தது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி வழங்கினார்.
எனவே, கல்வி ஒன்றுதான் நம்மிடமிருந்து யாரும் பிரிக்க முடியாத சொத்து, நம்மை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்கும் ஒரே வழி என்பதை மாணவிகள் மனிதில் வைத்து நன்கு படிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி வைஸ்-சேர்மன் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், கருணாநிதி, வேப்பூர் யூனியன் வைஸ்-சேர்மன் செல்வராணி, முன்னாள் வேப்பூர் சேர்மன் அழகு.நீலமேகம், ஆலத்தூர் யூனியன் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவர் ராகவன், குன்னம் ஊராட்சித்தலைவர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.