Perambalur: The Collector, who attended the Sengunam Gram Sabha, praised the self-help group and its workers and presented them with prizes!
உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1ஆம் தேதியன்று ஆண்டுதோறும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடந்தது. செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட அல்லது திரவக்கழிவு மேலாண்மை வசதிகளைக் கொண்ட ஊராட்சிகளாக அறிவித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கை, வரவு செலவு மற்றும் பணிகள் தேர்வு செய்தல், தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 18 முதல் 35 வயது உடையவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் ஏழை எளிய மக்களின் நலிவுற்ற தன்மையும், வறுமையும் குறைப்பதற்காக கிராம செழுமை மீட்சி திட்டம் குறித்த திட்ட அறிக்கை, கூட்டாண்மை வாழ்வாதாரம் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளியின் பெயர் மாற்றம் அல்லது பெயர் சேர்த்தல் தொடர்பான விவரங்கள், இதர பொருட்கள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, செங்குணம் ஊராட்சி தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது. ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் 100% குடிநீர் இணைப்பு வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், ஊராட்சிக்கான வரவு செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதர வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கிராம ஊராட்சிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த 18 தூய்மை காவலர்களுக்கும், ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்ட 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் (கூ.பொ) வெங்கடேஸ்வரன், பெரம்பலூர் பிடிஓ-க்கள், பூங்கொடி, செல்வகுமார் (கி.ஊ), பெரம்பலூர் தாசில்தார் சரவணன் செங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.