Perambalur: Transport Minister Sivashankar inaugurated 4 buses on new routes!
மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் சுமார் 2.60 கோடி இலவச பயணங்களை மேற்கொண்டதாக, புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், 4 புதிய பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கிரேஸ் ரிண்டகி பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, மேட்டுப்பாளையம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வகையில், பி.எஸ்.6 ரக புதிய மப்சல் பஸ்களை அமைச்சர் .சி.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கொளக்காநத்தம் முதல் சென்னை கிளாம்பாக்கம் முனையத்திற்கு ஒரு பேருந்தும், பூலாம்பாடியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு ஒரு பேருந்தும், பெரம்பலூரில் இருந்து நாமக்கல் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வகையில் ஒரு பேருந்தும், பெரம்பலூரில் இருந்து திருச்சி வழியாக கோயம்புத்தூர் செல்லும் வகையில் ஒரு பேருந்தும் என நான்கு புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
திருச்சி மண்டலத்தில் 32.61 கோடி மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் அரசு பேருந்துகளில் இலவச பயணங்களும், சராசரியாக ஒரு நாளைக்கு 2.91லட்சம் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பயனைந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 2021 முதல் தற்போது வரை 2.60 கோடி இலவச பயணங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் நகராட்சியில், துறையூர் சாலையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இயக்கி தொடங்கி வைத்து ஒளிரச்செய்தார்.
திமுக பொறியாளர் அணி மாநில பொறுப்பாளர் பரமேஸ்குமார், வக்கீல் ராஜேந்திரன், நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பந்தட்டை ராமலிங்கம் , மாவட்ட திமுக பொறுப்பாளார் ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், நகராட்சித் துணைத் தலைவர் ஆதவன், மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், மகாதேவி ஜெயபால், கருணாநிதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகராட்சி திமுக பொறுப்பாளர் பரிதி, ஒப்பந்ததரார் தமிழழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.