Perambalur: “Ungalai thedi Ungal Ooril” project; A collector who ate in the school breakfast program!
மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் கலெக்டர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் 24 மணி நேரம் தங்கி கள ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த மாதம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், நேற்று காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை
மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூர் அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதியில் மாணவர்கள் தங்கும் அறைகள், சமையல் கூடம், கழிவறை, குடிநீர் வசதி,வாரந்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலின்படி, உணவு வழங்கப்படுகிறதா என்றும், விடுதியில் தங்கி உள்ள மாணவர்களின் வருகை பதிவேடு, விடுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வாலிகண்டபுரம் ஊராட்சி, தம்பை ஆதிதிராவிட தெற்கு தெருவில், மின் விளக்குகள் 100 சதவீதம் இயங்குகிறதா என்றும், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வல்லாபுரம் கிராமத்தில் தெரு மின் விளக்குகள் முறையாக இயங்குகிறதா, மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர் வாரப்பட்டுள்ளதா என்பது குறித்து கொட்டும் மழையில் தெருவில் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இன்று காலை வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் காலை உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
பிடிஓ செல்வமணியன், தாசில்தார் மாயகிருஷ்ணன், வாலிகண்டபுரம் ஊராட்சித் தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் பவானி ரெங்கராஜ் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.