Perambalur: Unorganized workers can file complaints against unions that collect extortion money: Labor Department!
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் நலத்திட்ட உதவிகளை பெற்று தருவதாக கூறி முறைகேடாக பணம் வசூல் செய்யும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து புகார் தெரிவிக்க தொழிலாளர் உதவி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உதவி ஆணையர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள், டிரைவர்கள் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொருட்டு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் கீழ் 18 வகையாக அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூரில் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.
அனைத்து உறுப்பினர் பதிவு, நிதி உதவி கோரும் மனுக்கள் அனைத்தும் https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு உறுப்பினர் பதிவு அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிதிஉதவிகள் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். உறுப்பினர் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் எவ்வித கட்டணமும் இன்றி அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களின் அனைத்து பதிவு உள்ளிட்ட கேட்பு மனுக்கள் https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து விபரங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் உள்ளதை படித்தறிந்து வீட்டிலிருந்த படியே இலவசமாக விண்ணப்பித்து அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்ட) அலுவலகத்தை நேரில் அணுகி குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து பயன்பெறலாம்.
இவ்வாறுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சில தொழிற்சங்கங்கள் தங்களை தொழிலாளர் நலவாரியத்தின் அலுவலர்கள், ஏஜென்டுகள் என்றும் தங்கள் சங்க அலுவலகத்தை அரசு அலுவலகம் என்று பொய்யாக சொல்லியும், தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகளை பெற்று தர அலுவலக செலவினம் என பொய்யாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பதாக தெரியவருகிறது. மேலும் கட்டுமான நலவாரியத்தின் மூலம் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடு பெற்று தருவதாக கூறி தகுதியற்ற தொழிலாளர்கள் உட்பட பல்வேறு நபர்களிடம் தொழிற்சங்க பிரதிநிதிகள் முறைகேடாக பணம் வசூலிப்பதாகவும் தெரியவருகிறது.
தொழிலாளர்கள் நல வாரிய சேவைகள் செய்து தருவதாக கூறி தொழிற்சங்க பிரதிகள் எவரேனும் முறைகேடாக பணம் வசூல் செய்திருந்தாலும், இனிவருங்காலங்களில் அவ்வாறு முறைகேடாக பணம் வசூல் செய்தாலும் losssperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது மேற்படி அலுவலக முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அல்லது 9445398759 என்ற தொலைபேசி எண்ணிற்கோ புகார் தெரிவித்தால் முறைகேட்டில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.