Perambalur: Vaccination works for cows, buffaloes; Collector Info!

தோல் கழலை நோய் / லம்பி தோல் நோய் என்பது எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய் ஆகும் தோல் கழலை நோய் என்பது பாக்ஸ் விரிடேயின் குடும்பத்தைச் சார்ந்த கேப்ரிபாக்ஸ் வைரஸினால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் (பசு மற்றும் எருமை) இருந்து கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் பிற புற ஒட்டுண்ணிகள் மூலம் மற்ற ஆரோக்கியமான கால்நடைகளுக்கு பரவுகிறது.

            இந்நோய் பாதிக்கப்பட்டால் கடுமையான காய்ச்சல் இருக்கும் கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி ஒழுகுதல் போன்றவை ஆரம்ப அறிகுறிகள் உடல் முழுவதும் கண்டு கண்டாக வீக்கம் காணப்படும், உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து அதன் மத்தியிலிருந்து புண்ணாகும். இந்த கட்டியின் அகலம் 0.5-5.0 செ.மீ வரை இருக்கும் நிணநீர் சுரப்பிகள் பெரியதாக காணப்படும் கால்நடை வீங்கி இருக்கும் மாடுகள் சோர்வாக காணப்படும்.
இந்த நோயானது பாதிக்கப்பட்ட கால்நடைகளில் முதல் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து உடல்  முழுவதும் இரண்டு முதல் ஐந்து சென்டி மீட்டர் அளவிலான தோலில் முடிச்சுகளை ஏற்படுத்துகிறது. தோல் முடிச்சானது தோல், தோல் திசு, சில நேரங்களில் தசை வரையிலும் ஏற்படுகிறது. முகம், கழுத்து, வாய், மூக்கு, கண் இமைகள் ஆகியவற்றில் கட்டிகள் ஏற்படும், கால்களில் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், கருக்கலைப்பு, சினை பிடிக்காமை மற்றும் நோயின் வீரியம் அதிகமாகும் போது கால்நடைகள் இறக்க நேரிடுகிறது.
பாதிக்கப்பட்ட கால்நடைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களில் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும், பால் உற்பத்தி திறன் பல வாரங்களுக்கு குறைவாக காணப்படும். நோயுற்ற விகிதம் 10-20 சதவிகிதம் மற்றும் மரண விகிதம் 1-5 சதவிகிதமாகவும் இருக்கும்.
இந்நோய் கொசு, ஈ, உண்ணி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக இந்த நோய் பரவுகிறது கோடைகால தொடக்கத்தில் இந்த நோய் அதிக அளவில் பரவுகிறது. பால் கறவையாளர்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. கன்று குட்டிகள், பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும் போதும் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாடு வாங்கி வந்தால் அதன் மூலமாகவும் பரவுகிறது.  இந்த வைரஸ் கிருமியானது மாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18  முதல் 30 நாட்கள் வரை வாழும்.

இந்த நோய் தொற்று 60% வரை மாடுகளை பாதிக்கலாம். பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்து காணப்படும். காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும். இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. சில மாடுகளில் மடிநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிக அளவில் நோய்தொற்று ஏற்பட்டாலும் இறப்பு சதவிகிதம் மிக குறைவாக இருக்கும்.

நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளை ஆரோக்கியமான கால்நடைகளிடம் இருந்து தனிமைப்படுத்துதல். பாதிக்கப்பட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கொசுக்கள், ஈக்கல், உண்ணிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம். பாதிக்கப்பட்ட கால்நடைகளை சந்தைக்கு கொண்டு செல்லுதலை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரம் தனியாக இருக்க வேண்டும். கறவையாளர்கள், பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகே மற்ற மாடுகளை தொடவேண்டும். சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கும், வரும் 05.08.2024 முதல் தொடங்கி 21 நாட்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர்கள் அனைத்து தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் இத்தடுப்பூசியினை போட்டுக்கொண்டு, தங்கள் கால்நடை செல்வங்களை இக்கொடிய நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளும் படி கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks