Perambalur: Voter list summary revision for 2025; 5,185 young voters added!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரும், அரசு செயலருமான அர்ச்சனா பட்நாயக் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் 2025க்கான வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில், புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், இறந்தவர்கள் / இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்கவும், முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்களை செய்வதற்கும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களில் 332 வாக்குச்சாவடி நிலைய அலுவர்களும், 166 வாக்குச்சாவடி மைய அலுவலர்களும், 33 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களின் மேற்பார்வையாளர்களும்,
- குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களில் 320 வாக்குச்சாவடி நிலைய அலுவர்களும், 178 வாக்குச்சாவடி மைய அலுவலர்களும், 31 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களின் மேற்பார்வையாளர்களகளும் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்களில் 652 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும், 344 வாக்குச்சாவடி மைய அலுவலர்களும், 64 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களின் மேற்பார்வையாளர்களகளும் தற்போது வாக்காளர் சிறப்பு சுருக்கத்திருத்தம்-2025க்கு பணியாற்றி வருகின்றனர்.
மேலும் 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்களுக்காக 20,846 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 18 முதல் 19 வயது 2,419 இளம் வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,766 இளம் வாக்காளர்களும் என மொத்தம் 5,185 இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 10 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்ப்பட்டது, அரசு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.