Perambalur: Welfare assistance worth Rs. 3.98 lakhs in People’s Grievance Day meeting: Collector provided!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே வந்து கலெக்டர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர், வருவாய்த்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் இயற்கை மரண உதவித்தொகையாக 02 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.45,000 மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணையினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 03 பயனாளிகளுக்கு முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிபி சேர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவர் உட்காரும் வகையிலான கார்னர்சீட், சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.24,550 மதிப்பிலான உதவி உபகரணங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 05 பயனாளிகளுக்கு ரூ.28,190 மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 06 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.3,97,740 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து 307 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.