Perambalur: Women can apply for the Avvaiyar Award; Collector’s information!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ஒளவையார் விருது சமூக சீர்திருத்தம், மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்து விளங்கும் மகளிருக்கு ஒளவையார் விருது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கு ஒளவையார் விருது பெற https;//awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெறுவோருக்கு, ரூ1,50,000/-(ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 31.12.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 05 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கான இச்சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296209 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.