Periyar statue disrespect in two places: Criminals need a stern action! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கவராப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 அடி உயர தந்தை பெரியார் சிலையின் கைகளில் விஷமிகள் சிலர் செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

அதேபோல், திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியார் சிலையின் கைத்தடியை சிலர் உடைத்து வீசியுள்ளனர். இரு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சிலைகளை அவமதிப்பது புதிய வழக்கமாக மாறி வருகிறது. மன நலம் பாதிக்கப்பட்ட மிருகங்கள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள்.

கடந்த 17-ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாளன்று சென்னையில் அவரது உருவச்சிலை மீது செருப்பு வீசிய ஜெகதீசன் என்ற பாரதிய ஜனதா வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அதேபோல், தாராபுரத்திலும் பெரியார் சிலையை அவமதித்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அதன்பிறகும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் வலிமையான சக்திகள் உள்ளன; இவை திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதையே காட்டுகின்றன.

இத்தகைய நிகழ்வுகளின் மூலம் தந்தை பெரியாரின் புகழை இம்மியளவும் குலைக்க முடியாது. அதே நேரத்தில் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.

எனவே, தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீதும், அதற்கு தூண்டியவர்கள் மீதும் மிகக்கடுமையான நடவடிக்கையை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!