PMK. Founder doctor Ramadoss and Anbumani M.P., : greeting to Eid-Mubarak
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி:
தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தியாகத் திருநாளான பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. பக்ரித் திருநாளின் போது ஆடுகளை பலியிடும் இஸ்லாமியர்கள் அதை மூன்று பிரிவுகளாக பிரித்து ஒன்றை அண்டை வீட்டார்கள் மற்றும் உறவினர்களுக்கும், மற்றொன்றை ஏழைகளுக்கும் கொடுத்து மூன்றாவது பங்கை மட்டும் தாங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இது ஈகையையும், நல்லுறவையும் வலியுறுத்துகிறது என்றால், இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகள் ஊனமற்றவையாகவும், ஒரு வயது நிறைவடைந்ததாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுவது ஊனமுற்ற உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது என்ற தத்துவத்தை வலியுறுத்துகிறது.
கேரளத்தில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதில் கூட இஸ்லாமிய நாடுகள் தங்களின் ஈகைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பக்ரீத் திருநாளை கொண்டாடாமல் அதற்கான செலவுக்காக வைத்திருந்த தொகையை கேரளத்திற்கு நிவாரண நிதியாக வழங்கி பக்ரீத் திருநாள் வலியுறுத்தும் தத்துவங்களுக்கு வலிமை சேர்த்துள்ளனர்.
இத்தகைய சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்கம், ஈகை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதே போன்று, தர்மபுரி எம்.பியும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான அன்புமணியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.