Prime Minister’s Small Scale Food Processing Enterprises can apply to start a business through the Regulation Scheme; Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சுழலை மேம்படுத்துவதிலும் அதன் முலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழக அரசு சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க வகையில் மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று “ பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ( பி.எம்.எஃப்.எம்.ஈ)” ஆகும்.
இத்திட்டதின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைபாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் இட்லி தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச் செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு , பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைத் திண்பண்டங்கள் தயாரித்தல், காப்பி கொட்டை அரைத்தல், அரிசி மற்றும் சோளப் பொரி வகைகள், வறுகடலை, சத்து மாவு, பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்துதல் செய்தும் பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம். ரூ 1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவுப் பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதி பெற்றவை.
திட்ட தொகையில் 10% முதலீட்டாளர் தம் பங்காகச் செலுத்த வேண்டும் 90% வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும். அரசு மானியம் 35%, அதிக பட்சம் ரூ 10.00 இலட்சம் வரை வழங்கப்படும். சுய உதவிக் குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 40,000 வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற http://pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வெண்டும்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் அவர்களை நேரடியகவோ அல்லது 89255 33977 , 89255 33978 என்ற தொலைபேசி வழியாகவோ அணுகி பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.