Progression truck strike: talks without a government watch the fun? PMK. Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

சுங்கக்கட்டண சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா முழுவதும் சரக்குந்து உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் ஐந்தாவது நாளாக இன்றும் நீடிப்பதால், மக்கள் அவதிகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இப்போராட்டத்தால் நாடு முழுவதுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

சரக்குந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்ததுமே அவர்களின் சங்க நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும். சரக்குப் போக்குவரத்து தடை பட்டால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். தொழிற்சாலைகளின் இயக்கம் தொடங்கி காய்கறி விற்பனை வரை அனைத்தும் சரக்குந்து போக்குவரத்தை நம்பியிருப்பதால், தொலைநோக்குப் பார்வையுடன் அரசு செயல்பட்டு இப்போராட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அவற்றுக்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணமாக ரூ.18,000 கோடியை வசூலித்துக் கொள்ள வேண்டும்; பெட்ரோல்-டீசல் விலைகளை காலாண்டுக்கு ஒருமுறை மாற்றம் செய்வதுடன், அவற்றை ஜி.எஸ்.டி வரி விதிப்பின்கீழ் கொண்டு வர வேண்டும்; மூன்றாம் நபர் காப்பீட்டுக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகியவை தான் அவர்களின் முக்கியக் கோரிக்கைகளாகும். இவற்றில் ஏதேனும் ஒரு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து இருந்தால் கூட, மற்ற கோரிக்கைகள் பற்றி பின்னர் பேசலாம் என்று கூறி சரக்குந்து உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருக்கும். ஆனால், அதைக்கூட அரசு செய்யவில்லை.

சரக்குந்துகள் வேலைநிறுத்தம் ஐந்தாவது நாளாக நீடிக்கும் நிலையில், அதற்கு தீர்வு காண்பது பற்றி பேச்சு நடத்த வரும்படி சரக்குந்து உரிமையாளர் சங்கத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் தொடரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பற்றாக்குறை காரணமாக காய்கறிகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு சரக்குந்துகள் ஓடாததால் தேங்கிக் கிடக்கிறது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் கோடிக்கணக்கில் முட்டைகள் அனுப்பப்படாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களுக்குள் முட்டைகள் அனுப்பப்படாவிட்டால் அவை வீணாகிவிடும் ஆபத்து உள்ளது.

ஒரு நாள் மழை பெய்தால் நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள உப்பு கரைந்து யாருக்கும் பயனில்லாமல் போய்விடக்கூடும். இவை தவிர சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டிகள், திருப்பூரில் ஆயத்த ஆடைகள், கோவையில் மோட்டார் எந்திரங்கள், அரியலூரில் சிமெண்ட் போன்றவை தேக்கமடைந்துள்ளன. இது அந்த ஆலைகளின் உற்பத்தியை பாதிக்கக்கூடும்.

நாடு தழுவிய சரக்குந்து வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக வணிக அவைகளின் கூட்டமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தம் நீடிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

மற்றொருபுறம் சரக்குந்துகள் ஓடாததால் அவற்றின் உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.4,000 கோடி வீதம் மொத்தம் ரூ.16,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இழப்புகள் அனைத்தும் யாரோ தனிப்பட்ட சிலருக்கு ஏற்படும் பாதிப்பல்ல. இவை ஏதோ ஒரு வகையில் அரசுத் தரப்பில் வரியாகவோ, சரக்குந்து உரிமையாளர்கள் தரப்பில் வாடகை உயர்வு மற்றும் அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வாகவோ அப்பாவி மக்களின் தலையில் சுமத்தப்படும் என்பது தான் எதார்த்தமாகும்.

இதையெல்லாம் உணர்ந்து சரக்குந்துகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இச்சிக்கல் குறித்து பேச்சு நடத்த வரும் படி சரக்குந்து உரிமையாளர்களை அழைக்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன்? என்பது தான் தெரியவில்லை.

வேலைநிறுத்தம் தொடங்கி 5 நாட்களாகியும் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வராததால், தண்ணீர், பால், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான சரக்குந்து போக்குவரத்தையும் நிறுத்தப்போவதாக சரக்குந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அவ்வாறு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதும் நிறுத்தப்பட்டால் நிலைமை மோசமாகும்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் சரக்குந்து உரிமையாளர்களை அழைத்துப் பேச்சு நடத்தி இந்தப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும். ஐந்தாவது நாளாக நீடிக்கும் சரக்குந்துகள் வேலைநிறுத்தத்தை இன்றுடனாவது முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!