Request to Tamil Nadu Chief Minister: Stop the relocation of the statue of leader Narayanasamy Naidu in Perambalur; Tamilaga Vivasaigal Sanga,m requests!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர், ஆர்.ராஜாசிதம்பரம், முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாயிகள் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் விவசாயிகளுக்கு கிடைத்திட அரசிடம் போராடி சலுகைகளை பெற்றுத் தந்த விவசாயிகளின் விடிவெள்ளி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவரின் முழு திருவுருவச் சிலை தமிழகத்திலேயே பெரம்பலூரில் மட்டுமே உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நன்கொடையாக கொடுத்த பணத்தை கொண்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பெரம்பலூர் பேரூராட்சியில் 29.01.1998அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு (தீர்மான எண் 264) 27.02.1998அன்று சிலை புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டது.

இந்த சிலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே வரும் பகுதியில் இடது புரத்தில் அமைக்கக்ப்படும் போதே போக்குவரத்துக்கு எந்த வித இடையூரும் இன்றி சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டது. இந்த சிலை அருகே பேருந்துகளும் வாகன ஓட்டிகளும் எந்தவித இடையூறும் இன்றி எளிதாக கடந்து சென்று வருகின்றனர். சிலை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நேற்று 31.12.2024 அன்று நடைபெற்ற பெரம்பலூர் நகர் மன்ற கூட்டத்தில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள நாராயணசாமி நாயுடு சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் அந்தப் பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது எனவும் அதனால் அங்கிருக்கும் சிலையை அகற்றி மற்ற சிலைகள் உள்ள பகுதியில் அந்த சிலை மாற்றி அமைக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகின்றோம். பெரம்பலூர் நகரில் பல்வேறு சிலைகள் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் இன்றி சாலையின் ஓரமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிலை போக்குவரத்துக்கு இடையுராகவும் இந்த சிலையினால் அந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உண்மைக்கு புறம்பான காரணங்களை கூறி அந்த சிலையை அகற்றிய தீர வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தீர்மானம் நிறைவேற்றி உள்ள நகராட்சி நிர்வாகத்தை தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து அதனை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சனையில் தலையிட்டு சிலை தற்போது உள்ள இடத்திலேயே இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம் என்றும், சிலையை தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்துக் கொள்கிறோம், என அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது சிலை இருப்பதால் மட்டுமே, வெளியே செல்லும் பேருந்துகள் சிரமின்றி செல்கின்றன. இந்த சிலை அகற்றப்பட்டால், தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் புதிதாக முளைக்கும் இதனால், பொதுமக்கள், அம்மா உணவகத்திற்கு சென்று வரவும், பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வருவதும் பெரும் சிரமம் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு சிலை அங்கே தொடர்ந்து இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!