Resolution on the meeting of the Government Officer to demand compensation equivalent to the federal government
நாமக்கல் : 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை கலைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மாநில உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் சண்முகராஜன் தலைமை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் தண்டபாணி, நாமக்கல் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட தலைவர் நவலடி வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை கலைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். ஊதியக்குழு ஒரு நபர் குழுவின் தலைவர் ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தனது அறிக்கையினை விரைந்து அளித்திடவேண்டும்.
அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் வரும் அக்டோபர் 4ம் தேதி நடத்திடும் சிறு விடுப்பு போராட்டம் மற்றும் வரும் நவம்பர் 27ம் தேதி நடத்திடும் காலவரையற்ற போராட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் கலந்துகொள்ளாது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்துவது.
2018 – 21ம் ஆண்டு வட்டக்கிளை, மாவட்ட மையத்தேர்தல் அக்டோபர் மாதத்திற்கும் முடித்து மாநில மையத்தேர்தல் நவம்பர், டிசம்பர் மாதத்தில் மாநில தேர்தல் ஆணையாளர்கள் சுருளிராஜ், துணை தேர்தல் அலுவலராக ராஜேந்திரன், கிரிதரன் ஆகியோர் நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் விக்டர், பூங்குழலி, மாநில அமைப்பு செயலாளர் பத்மநாபன், மாநில துணை பொது செயலாளர்கள் துரைபாண்டி, அமிர்தகுமார்,மாநில இணை செயலாளர்கள் நந்தகுமார், சிவக்குமார், ராஜகணபதி, அபுதாகீர், மாநில பொருளாளர் குமார் உள்ளிட்ட 33 மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.முடிவில் நாமக்கல் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.